Monday 2 April 2012


தெய்வப்பெண்ணாம் தேவதையோ!
அன்றி மயிலென எழில் வீசும் மங்கைதானோ!!
என மயங்கியோன்
மண்ணுறைப்பெண்மகள் இவளென ஓர்ந்து
மயக்கம் நீங்கி
எழிலுறை ஏந்திழைதனையே இனிது நோக்க.........


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

கருங்குழல் பரவ செவ்வாய் மலர
செறி எயிற்றினள்
உதிர முயலும் முத்தென
முறுவல் தழுவ
கச்சற நிமிர்ந்தொளி வீசித்திரண்ட
இளமுலை வருத்தக்கொடியிடைத்துவள

மயிலியற்பெண்ணாள்
சிலிர்த்தெழும் விழியால்
ஏறினை

எதிரிடை நோக்க

தினவெடுத்தத்தோளினன்
திகைத்து நின்றனன்

எதிர்ப்படும் எவரையும்
தனித்துநின்றே
அழித்தொழிக்கும் திறத்தினள்
தெய்வப்பெண்ணாள்
பெரும்படை உடன்வர
சூழ்ந்து வளைத்து நின்றது போல்

தாக்கி வருத்தும்
மங்கையின் நோக்கினை
தாங்கும் திறனின்றி

பதைத்துளம் வியர்த்து
செயலற்று நின்றனன் 


இளம்பரிதியன் 


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு – குறள் 

மனம் மீட்டும் மாலை
தென்றல் தவழ் பொய்கை இடை 
தேன் சிந்தும் மலர்ச்சோலை
தலைவன் ஏறு என நடை பயில
எதிர் கொண்டாள் தலைவி

வாள் நீட்டி பகை அறுத்தோன்
சேள் நீளத்தனை இழந்தான்
மெய் மயங்கி
வியந்து நின்றான்

எழில்தனிலே வான் வியக்கும்
அன்னமும் நடை கேட்கும்
அரம்பைதான்
வழிமாறி வந்தனளோ?
தெய்வப்பெண்ணிவளோ?
வானவில்லின் நிறம் தேக்கி
வதியும் மயிற்கூட்டந்தனில்
ஆய்ந்தெடுத்த மயில் தானோ?
குழைத்தெடுத்த பொன்னாலே
புனைந்தெடுத்தக்காதணியை
சுமை போல அணிந்துறையும்
மானிடப்பெண்தானோ?

மயங்குதே என் நெஞ்சம்!!


இவண்
இளம்பரிதியன்
 

நினைவுகள்
நீ நினைத்தால் நீள் விழி நீந்தும்
இன்பக்காட்சியாய் நாளும் மாறும்

நிதம் மாறிடும் காட்சி மாறி
நினைவெலாம் நிறைந்த உன்றன்
எதிரிலே காட்சியாகும் 
காட்சியின் மாட்சி என்றும் 
இரண்டிலே ஒன்றைக்காணல்
இதயங்கள் ஒன்றிவிட்டால்
நினைவுகள் ஒன்றித்தழுவும்
ஒன்றுதல் ஒன்றே அன்பின் உயர்நிலை
அதனால் நாமும்
நினைவினை நீட்ட வேண்டா
நிதம் நிதம் ஒன்றி உயிராய்
மாந்துவோம் இன்பத்தேனை
அன்பினால் உலகை வெல்வோம்

இளம்பரிதியன்

வலிகொடுத்தும் புறந்தள்ளி
பூ உலகைக்காட்டி 
தன்வலி குறைந்தும் அமுதூட்டி
என் வலிவைக்கூட்டி
ஞாலமே குறை சொலினும்
நாளும் அணைத்து
கடு மொழி சொலினும் சோராது
அன்பே பொழிந்து 
உலக வெளியினிலே
சிறகடிக்கும் திண்மை ஈந்து 
காதல்தனில் எனை மறந்து 
இணையுடன் யான் ஏகினும்
தன் உயிர் கரைத்து காற்றில் ஏற்றி
என்னுயிரைக்காக்கும்
கருணை தெய்வம் எந்தாய் போல்
எவருமுண்டோ?


அன்புடன் இளம்பரிதியன்

இயற்கையின் அழகெல்லாம் 
இணைகையில்
நின் எழிலுருவம் விரிகிறதே 
காணுமிடமெல்லாம் 
நின் திருஉருவம் தெரிகிறதே 
மொட்டவிழா மலர் நின்றன் 
காதலைக்காட்டிடினும் 
அது நின் இதழ் போலே 
கட்டவிழும் நாள் எண்ணி 
ஏங்கிடுதே!
இளம்பரிதியன்


அன்பெனும் தென்றல் ஏறி எம் நெஞ்சமாம் கடலில் தோய்ந்து

நினைவினை நிதமும் மீட்டி நினைவெலாம் நீயேயானாய்


நினைவினை நீக்கநீக்க நின்நினைவலை பெருகல் கண்டேன்

 
உனை நிதம் மறப்பதற்கே உன் நினைவையே நாளும் கொண்டேன்

 
எனைஉடல் உயிரைப்போல காதலால் இறுகப்பற்றி தோய்ந்து

 
என்னிதயம் வென்றாய் வெல்வதே வெற்றி எனினும் தூயநற் 


காதலிற் தோல்வியும் வெற்றிஎன்பர் தோல்வியைத் துணையாய்க்


கொண்டே மலர்ந்திடும் அன்பினாலே வெல்லுவேன் உன்னை நானே!





இளம்பரிதியன் 

Sunday 1 April 2012

கனவோ? நினைவோ? 
இதழிலே இதழ் மறைத்து

மது நிறை மலர் நாண 

கனி இதழ்உடன் சேர்த்து

விழி நிறை அமுதாலெனை 

நாளும் உயிர்ப்பித்து

உன் நினைவால் எனை நிதம் கொல்லும்

நின் பிரிவென்ன கனவோ நினைவோ ? 


இளம்பரிதியன்